
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று நிறைவு பெற்று சூப்பர் 4 சுற்றுகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் முதலாவதாக நடைபெற்ற போட்டியில் வங்கதேசத்தை தோற்கடித்த பாகிஸ்தான் அடுத்ததாக செப்டம்பர் 10ஆம் தேதி பரம எதிரி இந்தியாவை மீண்டும் எதிர்கொள்கிறது. முன்னதாக இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்ற லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்ததை போலவே பாகிஸ்தானின் பந்து வீச்சில் ஏமாற்றத்தை கொடுத்தனர்.
அதனால் 66/4 என சரிந்த இந்தியா 150 ரன்களாவது தாண்டுமா என்ற கவலை ரசிகர்களிடம் ஏற்பட்ட போது மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடிய இஷான் கிசான் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 266 ரன்கள் குவிக்க உதவினார்கள். இருப்பினும் அதை பாகிஸ்தான் சேசிங் செய்ய துவங்கிய போது வந்த மழை போட்டியை மொத்தமாக நிறுத்தியது. எனவே அந்த போட்டியில் சந்தித்த பின்னடைவுக்கு இம்முறை பாகிஸ்தான் பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு இந்திய பேட்ஸ்மேன்கள் பதிலடி கொடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
அதே போல அந்த போட்டியில் இந்தியாவுக்கு பரிசளிக்க வேண்டிய தோல்வியை மழை வந்து தடுத்ததால் இம்முறை 100% சிறப்பாக செயல்பட்டு மீண்டும் கொடுப்போம் என்று கேப்டன் பாபர் அசாம் வங்கதேசத்தை வீழ்த்திய பின் தெரிவித்திருந்தார். ஆனால் செப்டம்பர் 10ஆம் தேதி மீண்டும் கொழும்பு நகரில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவிப்பதால் அப்போட்டியும் நடைபெறுமா என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது. இது போக இலங்கையில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டு வருவதால் 2023 உலகக் கோப்பைக்கு ஆசிய தயாராகும் வகையில் நடக்கும் இத்தொடரில் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சி வருகிறது.