
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறவுளது. அதனைத் தொடர்ந்து விரைவில் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அணிகள் தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 6 அணிகள் விளையாடுகின்றன. உலகக்கோப்பையில் களமிறங்கும் தங்களுடைய இறுதிக்கட்ட வீரர்களை தேர்வு செய்ய உதவும் இந்த தொடரில் விளையாடுவதற்கு ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் காயத்தை சந்தித்துள்ள கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இந்திய அணியை பலப்படுத்துவதாக அமைந்துள்ளது. இருப்பினும் இன்னும் முழுமையாக ஃபிட்டாகாமல் கடந்த 3 மாதங்களுக்கு மேல் எவ்விதமான முதன்மையான போட்டிகளிலும் விளையாடாமல் இருக்கும் அவர்களை ஆசிய கோப்பையில் தேர்வு செய்துள்ளது நிறைய விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.
இந்த நிலைமையில் இலங்கையில் நடைபெறும் தங்களுடைய ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் விரைவில் அங்கு செல்ல உள்ளனர். அதற்கு முன்பாக பெங்களூருவில் இருக்கும் என்சிஏவில் இந்திய வீரர்களின் ஃபிட்னெஸ் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் சோதனை நடைபெற்று வருகிறது.