
AFG vs HKG, 1st Match: ஹாங்காங் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் பேட்டிங்கில் அரைசதமும், பந்துவீச்சில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நேற்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணியில் ரஹ்மனுல்லா குர்பாஸ், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த செதிகுல்லா அடல் - முகமது நபி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் இருவரும் இணைந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், முகமது நபி 33 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த குல்பதீன் நபும் 5 ரன்னுடன் நடையைக் கட்ட, மற்றொரு தொடக்க வீரரான செதிகுல்லா அடல் அரைசதம் கடந்து அசத்தினார். அவருடன் இணைந்த அஸ்மதுல்ல ஒமர்ஸாய் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், 21 பந்துகளில் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பின் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஒமர்ஸாய் விக்கெட்டை இழக்க, அடுத்து கரிம் ஜானத்தும் 2 ரன்னுடன் நடையைக் கட்டினார்.