
இலங்கையில் நடைபெற்று வந்த மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியானது இந்திய அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில் சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டின் வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்திய மற்றும் இலங்கை மகளிர் அணிகளைச் சேர்ந்த வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
அதன்படி பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் துணைக்கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஒரு இடம் முன்னேறி நான்காம் இடத்தைப் பிடித்துள்ளார். அதேசமயம் இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தபத்து மூன்று இடங்கள் முன்னேறி 06ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் இந்திய வீராங்களை ஷஃபாலி வர்மா 11ஆம் இடத்தில் நீடித்து வரும் நிலையில், இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரித் கவுர் 5 இடங்கள் பின் தங்கி 16ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
மேற்கொண்டு இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒரு இடம் முன்னேறி 18ஆம் இடத்திற்கும், இலங்கை வீராங்கனை ஹர்ஷிதா சமரவிக்ரமா மூன்று இடங்கள் முன்னேறி 20ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் பெத் மூனீ மற்றும் தஹ்லியா மெக்ராத் இருவரும் முதலிரண்டு இடங்களை தக்கவைத்துள்ளனர். மேலும் மூன்றாம் இடத்தில் வெஸ்ட் இண்டீஸின் ஹீலி மேத்யூஸ் நீடித்து வருகிறார்.