
தற்பொழுது சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் கிரிக்கெட் டி20 வடிவத்தில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் முதல் முறையாக ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு கிரிக்கெட் அணிகளை ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு அனுப்பி வைத்திருக்கிறது.
இந்த நிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதலில் நடைபெற்ற பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வென்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இதையடுத்து தற்போது ஆடவருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
அதில் இன்று காலை நடைபெற்ற முதல் போட்டியில் மங்கோலியாவை நேபாள் எதிர்கொண்டது. குறிப்பாக மங்கோலியா முதல் முறையாக இந்த போட்டியில் தான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் காலடி வைத்துள்ளது. அதன் காரணமாக அந்த அணியின் 11 வீரர்களும் இந்த போட்டியில் தான் அறிமுகமான நிலையில் டாஸ் வென்ற மங்கோலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.