Advertisement
Advertisement
Advertisement

AUS vs ENG, 3rd ODI: வார்னர், டிராவிஸ் அதிரடி சதம்; இங்கிலாந்துக்கு 364 டார்கெட்!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 355 ரன்களை சேர்க்க, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து அணிக்கு 364 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan November 22, 2022 • 13:20 PM
AUS vs ENG, 3rd ODI: David Warner, Travis Head's record breaking partnership helps Australia post a
AUS vs ENG, 3rd ODI: David Warner, Travis Head's record breaking partnership helps Australia post a (Image Source: Google)
Advertisement

இங்கிலாந்து அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலிரண்டு ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றிபெற்று தொடரை வென்றுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் வென்றால் இங்கிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்யலாம் என்ற உத்வேகத்துடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

Trending


அதன்படி களமிறங்கியா ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் - டேவிட் வார்னர் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியின் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசி தள்ளினர். 

இதில் ஒருமுனையில் டேவிட் வார்னர் நிதானத்தை கடைபிடிக்க மறுமுனையில் டிராவிஸ் ஹெட் தனது அதிரடி ஆட்டத்தில் மிரட்டி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை விழிபிதுங்க வைத்தார். இதனால் இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர்கள் என்ன செய்வதென்று திகைத்து நின்றனர்.

இப்போட்டியில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 91 பந்துகளில் தனது மூன்றாவது சர்வதேச ஒருநாள் சதத்தை பதிவுசெய்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து அதிரடி காட்டத்தொடங்கிய டேவிட் வார்னர் தனது 19ஆவது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். 

இதன்மூலம் டேவிட் வார்னர் 1,043 நாள் 67 இன்னிங்ஸுகளுக்கு பிறகு தனது முதல் சர்வதேச சதத்தைப் பதிவு செய்து இழந்த ஃபார்மை மீட்டுள்ளார். முன்னதாக கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதியே அவர் தனது கடைசி சர்வதேச சதத்தைப் பதிவுசெய்திருந்தார். 

மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் 130 பந்துகளில் 4 சிக்சர், 16 பவுண்டரிகள் என 152 ரன்களிலும், டேவிட் வார்னர் 102 பந்துகளில் 2 சிக்சர், 8 பவுண்டரிகள் என 106 ரன்கள் எடுத்த நிலையிலும் ஒல்லி ஸ்டோனின் ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இப்போட்டியில் டிராவிஸ் ஹெட் - டேவிட் வார்னர் இணை பார்ட்னர்ஷி முறையில் 269 ரன்களைச் சேர்த்தனர். இதன்மூலம் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னஷிப்பாகவும் இது அமைந்தது. அதன்பின் களத்திற்கு வந்த ஸ்டீவ் ஸ்மித் - மார்கஸ் ஸ்டோய்னிஸ் இணை ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டனர். 

அப்போது மழை பெய்ய தொடங்கியதால் 42.2 ஓவர்களில் ஆட்டம் தடைபட்டது. சிறுது நேரத்தில் ஆட்டம் தொடங்கினாலும் இப்போட்டி 48 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து தொடங்கிய ஆட்டத்தின் முதல் பந்திலேயே மார்கஸ் டோய்னிஸ் பெரிய ஷாட் அடிக்க முயற்சித்து 12 ரன்களோடு விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினார். 

அதன்பின் அதிரடியாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மி 16 ரன்களிலும், மிட்செல் மார்ஷ் 30 ரன்களிலும் விக்கெட்டை இழக்க,48 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 355 ரன்களைச் சேர்த்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் கடைசி கட்டத்தில் அபாரமாக பந்துவீசிய ஒல்லி ஸ்டோன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்நிலையில் இங்கிலாந்து அணி வெற்றிபெற டக்வோர்த் லூயிஸ் முறையில் மாற்றியமைக்கப்பட்ட இலக்கு படி 48 ஓவர்களில் 364 ரன்களை அடிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement