
பாகிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடி 41 பந்துகளிலேயே அரை சதமடித்தார். அவருடன் மறுபுறம் சற்று நிதான பேட்டிங்கை வெளிப்படுத்திய உஸ்மான் கவஜா 126 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கத்தை கொடுத்து 41 ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த மார்னஸ் லபுஷாக்னேவும் 16 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.
ஆனால் மறுபுறம் தொடர்ந்து அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 26ஆவது சதத்தை அடித்தார். அவருடன் எதிர்புறம் விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் 32 ரன்களிலும், ட்ராவிஸ் ஹெட் 40 ரன்களிலும் அவுட்டானார்கள்.அடுத்த சில ஓவர்களிலேயே இரட்டை சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வார்னர் 16 பவுண்டரி 4 சிக்சருடன் 164 ரன்கள் குவித்து அவுட்டானார்.