
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான அப்துல்லா சஃபீக் மற்றும் சயீம் அயூப் இருவரும் டக் அவுட்டாகி வெளியேறினார்.
தொடர்ந்து வந்த நட்சத்திர வீரர் பாபர் அசாம் 26 ரன்களில் எடுத்து சிறப்பாக விளையாடிய போது, திடீரென கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் வந்த சௌத் சகீலும் 5 ரன்களில் வெளியேற, பாகிஸ்தான் அணி 75 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில் கேப்டன் ஷான் மசூத் - ரிஸ்வான் கூட்டணி இணைந்து பாகிஸ்தான் அணியை மீட்க போராடியது.
இதில் ஷான் மசூத் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அனைத்து பொறுப்புகளும் ரிஸ்வான் தலையில் விழுந்தது. இதன்பின் அதிரடிக்கு திரும்பிய ரிஸ்வான், ஆஸ்திரேலியா பவுலர்களை சிதறடித்தார். சரியான பந்துகளை தேர்வு செய்து பவுண்டரிகளாக விளாசி தள்ளினார். சிறப்பாக விளையாடிய அவர் 74 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார்.