AUS vs WI, 2nd T20I: விண்டீஸை பந்தாடி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்று அசத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - ஜோஷ் இங்கிலிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ஜோஷ் இங்லிஸ் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த வார்னர் - கேப்டன் மார்ஷ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
Trending
இதில் மிட்செல் மார்ஷ் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 29 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 22 ரன்கள் எடுத்திருந்த டேவிட் வார்னரும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தர். பின்னர் களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடியதுடன் பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசி தள்ளி 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் அவருடன் இணைந்து விளையாடிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் 16 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார்.
ஆனாலும் தனது அதிரடியைக் கைவிடாத கிளென் மேக்ஸ்வெல் தொடர்ந்து சிக்சரும், பவுண்டரிகளையும் விளாசியதுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 5ஆவது சதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார். இறுதியில் அவருடன் இணைந்த டிம் டேவிட்டும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் ரன்களை வாரி வழங்கினர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 241 ரன்களைக் குவித்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிளென் மேக்ஸ்வெல் 12 பவுண்டரி, 8 சிச்கர்கள் என 120 ரன்களையும், டிம் டேவிட் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 31 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய விண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் - ஜான்சன் சார்லஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிராண்டன் கிங் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் ஹாட்ரிக் சிக்சருடன் இன்னிங்ஸைத் தொடங்கினாலும் 18 ரன்களுடன் பெவிலியனுக்கு திரும்பினார்.
இதையடுத்து களமிறங்கிய ஷாய் ஹோப் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரர் ஜான்சன் சார்லஸும் 24 ரன்களிலும், ரூதர்ஃபோர்ட் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 63 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த கேப்டன் ரோவ்மன் பாவெல் - ஆண்ட்ரே ரஸல் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
தொடர்ந்து பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசிய இந்த ஜோடி 6ஆவது விக்கெட்டிற்கு 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இதில் ரஸல் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 37 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரோமாரியோ செஃபெர்ட் 12 ரன்களோடு விக்கெட்டை இழந்தார். இதற்கிடையில் அரைசதத்தைப் பதிவுசெய்திருந்த கேப்டன் ரோவ்மன் பாவெலும் 5 பவுண்டரி, 4 சிக்சர்ளுடன் 63 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க வெஸ்ட் இண்டீஸ் அணியின் தோல்வியும் உறுதியானது.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மார்கஸ் ஸ்டொய்னிஸ் 3 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹசில்வுட், ஸ்பென்சர் ஜான்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now