2nd Test, Day 2: மீண்டும் சொதப்பிய டாப் ஆர்டர்; சரிவிலிருந்து மீளுமா ஆஸ்திரேலியா?
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 12 ரன்களைச் சேர்த்துள்ளது.

WI vs AUS, 2nd Test: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 253 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் ஆல் அவுட்டாகியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி கிரெனடாவில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் பியூ வெப்ஸ்டர் 60 ரன்களையும், அலெக்ஸ் கேரி 63 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஸாரி ஜோசப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் கிரேய்க் பிரேத்வைட் ரன்கள் ஏதுமின்றியும், கேசி கார்டி 6 ரன்னிலும், அதிரடியாக விளையாடி வந்த ஜான் காம்பெல் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 40 ரன்களில், அணியின் கேப்டன் ரோஸ்டன் சேஸ் 21 ரன்னிலும், ஜஸ்டின் க்ரீவ்ஸ் ஒரு ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிராண்டன் கிங் அரைசதம் கடந்து அசத்தினார்.
பின் 27 ரன்களில் ஷாய் ஹோப்பும், 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 75 ரன்களில் பிராண்டன் கிங்கும் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய வீரர்களில் ஷமார் ஜோசப் 29 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 253 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த நிலையில் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லையன் 3 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசில்வு மற்றும் பாட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 33 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
Also Read: LIVE Cricket Score
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர்கள் சாம் கொன்ஸ்டாஸ் ரன்கள் ஏதுமின்றியும், உஸ்மான் கவாஜா 2 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 12 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் கேமரூன் க்ரீன் 6 ரன்களுடனும், நாதன் லையன் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 45 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now