கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்து முடிந்த ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை அவ்வளவு எளிதில் எந்தவொரு இந்திய கிரிக்கெட் ரசிகராலும் மறந்துவிட முடியாது. ஏனெனில் ரோஹித் சர்மா தலைமையில் லீக் சுற்று முதல் அரையிறுதி சுற்றுவரை எந்தவொரு போட்டியிலும் தோல்வியையே தழுவாமல் கோப்பையை நிச்சயம் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பில் இறுதிப்போட்டியில் விளையாடியது.
ஆனால் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியைத் தழுவி ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதேசமயம் மறுபக்கம் ஆஸ்திரேலிய அணியோ 6ஆவது முறையாக ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்தது. மேலும் அந்த அணி கோப்பையை வெல்ல மிக முக்கிய காரணமாக டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லபுஷாக்னே ஆகியோர் திகழ்ந்தனர்.
ஏனெனில் இந்திய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 47 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய தருணத்தில் டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லபுஷாக்னே இருவரும் இணைந்து 193 ரன்கள் பார்ட்னர்ஷிப் இந்திய அணியின் கோப்பை கனவை சிதைத்தது. இதில் டிராவிஸ் ஹெட் 137 ரன்களை குவித்து ஆட்டமிழந்தாலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மார்னஸ் லபுஷாக்னே 58 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.