
Australia vs South Africa: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் இருந்து சீன் அபோட், ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், தன்வீர் சங்கா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி, அதன்பின் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்து அசத்தியுள்ளது.
இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி அடுத்த மாதம் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் ஆகஸ்ட் 10ஆம் தேதியும், ஒரு நாள் தொடரானது ஆகஸ்ட் 19ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான தென் ஆப்பிரிக்க டி20 மற்றும் ஒருநாள் அணிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.