
இங்கிலாந்து மகளிர் அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட் ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய மகளிர் அணி மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி இன்று (ஜனவரி 20) நடைபெற்றது.
சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு பெத் மூனி - ஜார்ஜியா வோல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெத் மூனி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்திய நிலையில், மறுமுனையில் ஜார்ஜியா வோல் 21 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஃபோப் லிட்ச்ஃபீல்டு 25 ரன்களுக்கும், எல்லிஸ் பெர்ரி 7 ரன்களிலும், அனபெல் சதர்லேண்ட் 3 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய பெத் மூனி அரைசதம் கடந்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் தஹ்லியா மெக்ராத் 26 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், 11 பவுண்டரிகளுடன் 75 ரன்களைச் சேர்த்த கையோடு பெத் மூனியும் விக்கெட்டை இழந்தார். இறுதியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து மகளிர் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய லாரன் பெல், சோஃபி எக்லெஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.