
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் ஆஃப்கானிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா தோற்கடித்தது. அப்போட்டியில் தென் ஆபிரிக்காவை 400 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் அரையிறுதிக்கு செல்லலாம் என்ற அசாத்தியமான சூழ்நிலையில் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 245 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக இளம் வீரர் ஓமர்சாய் 97* ரன்கள் எடுக்க தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து 245 ரன்களை துரத்திய தென் ஆப்பிரிக்காவுக்கு டீ காக் 41, தெம்பா பவுமா 23, மார்க்ரம் 25, க்ளாஸென் 10, மில்லர் 24 என முக்கிய பேட்ஸ்மேன்களை குறைந்த ரன்களில் அவுட்டாக்கி ஆஃப்கானிஸ்தான் முடிந்தளவுக்கு போராடியது.
ஆனாலும் இலக்கு குறைவாக இருந்ததால் வேன் டெர் டுஷன் 76, பெலுக்வயோ 39 ரன்கள் எடுத்து 47.3 ஓவரில் தென் ஆப்பிரிக்காவை வெற்றி பெற வைத்தனர். அதன் காரணமாக அதிகபட்சமாக முகமது நபி மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் ஆப்கானிஸ்தான் தோல்வியை சந்தித்து உலக கோப்பையிலிருந்து வெளியேறியது. இருப்பினும் 1992, 1996, 2019 சாம்பியன்கள் பாகிஸ்தான், இலங்கை மற்றும் இங்கிலாந்தை தோற்கடித்த அந்த அணி இத்தொடரில் மிகப்பெரிய எழுச்சி கண்டு அனைவரின் பாராட்டுகளை பெற்றது.