
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒருவேற்றியைப் பதிவுசெய்த 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்த நிலையில், தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது.
இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடரானது சமனில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டு, கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனையடுத்து இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை முதல் தொடங்கவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான ஆடம் ஸாம்பா விளையாடவுள்ள 100ஆவது ஒருநாள் போட்டியாகும். இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களில் மிட்செல் ஸ்டார்க்கை தவிர்த்து ஆடம் ஸாம்பா மட்டுமே ஆஸ்திரேலியாவுக்காக 100ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளார்.