
Cameron Green Record: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் கேமரூன் க்ரீன் தொடர்நாயகன் விருதை வென்றார்.
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் செயின்ட் கிட்ஸில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 170 ரன்களில் ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஷிம்ரான் ஹெட்மையர் 52 ரன்களையும், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 35 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் பென் துவார்ஷுயிஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஓவன் 37 ரன்களையும், கேமரூன் க்ரீன் 32 ரன்களையும், டிம் டேவிட் 30 ரன்களையும் சேர்க்க அந்த அணி 17 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி, வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது.