
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்துள்ள நிலையில், டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் முதல் மூன்று இடங்களில் இருந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சரிவை சந்தித்துள்ளனர்.
ஆஷஸ் தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுஷாக்னே முதலிடத்திலும், ஸ்டீவ் ஸ்மித் இரண்டாமிடத்திலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சதம் விளாசிய டிராவிஸ் ஹெட் மூன்றாம் இடத்திலும் இருந்தனர். ஒரே அணியைச் சேர்ந்த மூன்று வீரர்கள் ஐசிசி தரவரிசையில் முதல் 3 இடங்களை பிடித்திருந்தது இதுவே முதல்முறையாக அமைந்தது.
அதுமட்டுமல்லாமல் லபுஷாக்னே ஆட்டமிழந்தால் ஸ்டீவ் ஸ்மித், ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழந்தால் டிராவிஸ் ஹெட் என்றும் அடுத்தடுத்து களமிறங்கினர். ஆனால் இவர்கள் மூவருமே இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியில் சரியாக விளையாடவில்லை. இந்த நிலையில் ஐசிசி தரப்பில் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.