
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை தொடக்கம் தந்தனர்.
ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்த இணை அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. இதன்மூலம் முதல் 6 ஓவர்கள் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 59 ரன்களைச் சேர்த்து. மேலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், 99 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
பின் 50 ரன்களைச் சேர்த்திருந்த முகமது ரிஸ்வான், மேட் ஹென்றி பந்துவீச்சில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஃபகர் ஸமானும் முதல் பந்திலேயே மேட் ஹென்றியிடம் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து களமிறங்கிய சைம் அயுப் ரன்கள் ஏதுமின்றியும், இமாத் வாசிம் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் பாபர் ஆசாமுடன் இணைந்த இஃப்திகார் அஹ்மத் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாபர் ஆசாம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 3ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.