
கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 2ஆவது லீக் ஆட்டத்தில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கயானா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஃபால்கன்ஸ் அணியில் ஃபகர் ஸமான், கோஃபி ஜேம்ஸ் மற்றும் இமாத் வசிம் ஆகியோரைத் தவிர்த்து மற்ற விரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஃபகர் ஸமான் 40 ரன்களையும், இமாத் வசிம் 40 ரன்களையும், கோஃபி ஜேம்ஸ் 37 ரன்களையும் சேர்த்தனர். கயனா அணி தரப்பில் குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கயானா அமேசன் வாரியர்ஸ் அணியும் தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அந்த அணியில் ஷாய் ஹோப் 41 ரன்களையும், ரொமாரியோ செஃபெர்ட் 32 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, அந்த அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆல் ரவுண்டர் டுவைன் பிரிட்டோரியஸ் கடைசி ஓவரை எதிர்கொண்டார். முகமது அமீர் வீசிய கடைசி ஓவரில் டுவைன் பிரிட்டோரியர்ஸ் அடுத்தடுத்து 3 பவுண்டரிகளையும், கடைசி பந்தில் சிக்ஸரையும் விளாசி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார்.