
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கியது. 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிவில் ஆப்கானிஸ்தான், நேபாளம் அணிகள் வெளியேற்றப்பட்டன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 4 நாடுகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தன.
சூப்பர்4 சுற்று முடிவில் இந்தியா (2 வெற்றி, ஒரு தோல்வி), இலங்கை (2 வெற்றி, ஒரு தோல்வி) தலா 4 புள்ளிகள் பெற்றன. ரன்-ரேட் அடிப்படையில் இந்தியா முதலிடமும், இலங்கை 2ஆவது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
இத்தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது. இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றதால் வாய்ப்பை இழந்தது. ஹாரிஸ் ரவூஃப், நசீம் ஷா ஆகியோரின் காயம் பாகிஸ்தான் அணிக்கு ஆசிய கோப்பையில் பின்னடைவை ஏற்படுத்தியது.