சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களான விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் பட்டியலில் இணைந்தார் பாபர் ஆசாம். பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் அபாரமாக பேட்டிங் ஆடி பேட்டிங்கில் பழைய சாதனைகளை தகர்த்து புதிய மைல்கற்களை எட்டிவருவதால் விராட் கோலியுடன் ஒப்பிடப்படுகிறார்.
ஆனால் ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை ஆகிய தொடர்களில் பாபர் ஆசாமின் கேப்டன்சி கடும் விமர்சனத்துக்குள்ளானது. அணி தேர்வில் பாரபட்சம் காட்டுவதாக விமர்சனம் எழுந்தது. ஐசிசி தொடர்கள் தோல்வி எதிரொலியாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜாவும், தேர்வுக்குழு தலைவர் பதவியிலிருந்து முகமது வாசிமும் நீக்கப்பட்டனர்.
இடைக்கால தேர்வுக்குழு தலைவராக ஷாஹித் அஃப்ரிடி நியமிக்கப்பட்டார். ஆடும் லெவனை தேர்வு செய்வதிலும் அஃப்ரிடிக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. அதன்விளைவாக, நியூசிலாந்துக்கு எதிராக இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் 3 ஆண்டுகளுக்கு பிறகு சர்ஃபராஸ் அகமது களமிறக்கப்பட்டார். 110 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டை இழந்த நிலையில், அதன்பின்னர் பாபர் ஆசாமும் சர்ஃபராஸ் அகமதுவும் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 196 ரன்களை குவித்தனர்.