மார்ட்டின் கப்திலை பின்னுக்கு தள்ளிய பாபர் ஆசாம்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்தவர்கள் பட்டியளில் பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசாம் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி சிறப்பாக ஆடியது. டேரில் மிட்செல் அதிரடியாக விளையாடி 61 ரன்களையும், கேன் வில்லியம்சன் 57 ரன்களையும் சேர்க்க நியூசிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 226 ரன்கள் குவித்தது.
அதன்பின் 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. பாபர் அசாம் பொறுப்புடன் விளையாடி அரை சதம் கடந்தார். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர். இறுதியில், பாகிஸ்தான் 18 ஓவரில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி 4 விக்கெட்டும், மில்னே, சீயர்ஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்த வெற்றியின்மூலம் டி20 தொடரில் நியூசிலாந்து 1-0 என முன்னிலையில் உள்ளது. ஆட்ட நாயகன் விருது டேரில் மிட்செலுக்கு அளிக்கப்பட்டது.
Trending
இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 57 ரன்களை பதிவுசெய்ததன் மூலம் பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசாம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை பதிவுசெய்த வீரர்கள் பட்டியலில் 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம், அதிக டி20 ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் மார்டின் கப்தில் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். இப்பட்டியளின் முதலிரண்டு இடத்தில் இந்திய வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் உள்ளனர்.
- விராட் கோலி - இந்தியா - 4008 ரன்கள் (115 போட்டிகள்)
- ரோகித் சர்மா - இந்தியா - 3853 ரன்கள் (149 போட்டிகள்)
- பாபர் அசாம் - பாகிஸ்தான் - 3542 ரன்கள் (105 போட்டிகள்)
- மார்ட்டின் கப்தில் - நியூசிலாந்து - 3531 ரன்கள் (122 போட்டிகள்)
- பால் ஸ்டிர்லிங் - அயர்லாந்து - 3428 ரன்கள் (134 போட்டிகள்)
Win Big, Make Your Cricket Tales Now