பாபர் ஆசாமை விமர்சிப்பது சரிதான் - ரஷித் லத்தீஃப்!
நியூசிலாந்துக்கு எதிராக பாபர் ஆசாமின் ஆட்டத்தை விமர்சிப்பது சரியானது தான் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் ரஷித் லத்திஃப் தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நாளை துபாயில் நடைபெறவுள்ளது.
இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது வங்கதேசத்திற்கு எதிரான வெற்றிபெற்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. மேலும் இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் அரையிறுதிச்சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதிசெய்யும். அதேசமயம் முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிராக படுதோல்வியைச் சந்தித்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது.
Trending
அதனால் அந்த அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால் நிச்சயம் வெற்றிக்காக கடுமையாக போராடும். இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசாம் பொறுமையாக விளையாடியதற்காக பெரும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.
மேற்கொண்டு சமீப காலங்களில் அவர் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமலும் தடுமாறி வருகிறார். இதனால் எஞ்சியுள்ள போட்டிகளில் அவரது அணுகுமுறை எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிராக பாபர் ஆசாம் பொறுமையாக விளையாடியதால் அவரை விமர்சிப்பது சரியானது தான் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் ரஷித் லத்திஃப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “பாபர் ஆசாமை விமர்சிப்பது சரிதான் என்று நான் நினைக்கிறேன். பந்து பேட்டில் படவில்லை என்றால், உங்களிடம் ஒரு பிளான் பி இருக்க வேண்டும். நீங்கள் தொடர்ந்து டாட் பந்துகளை அதிகப்படுத்தினால், நீங்கள் அணியின் மீது அழுத்தத்தை சேர்க்கிறீர்கள். என்னைப் பொறுத்தவரை பாபர் ஆசாம் அதிக ரிஸ்க் எடுத்திருக்க வேண்டும். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சுதந்திரமாக விளையாட அவர்கள் சிரமப்படுவதால், ஆரம்பத்திலேயே ரன்களைச் சேர்த்திருக்க வேண்டும்.
Also Read: Funding To Save Test Cricket
நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை கணிக்க முடியாதது என்று மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் பாபரின் பேட்டிங் கணிக்க முடியாததாகிவிட்டது. மேலும் பாபர் ஆசாம் எந்த பந்திற்கு எந்த ஷாட்டை விளையாட போகிறார் என்பது பந்து வீச்சாளர்களுக்கு நன்றாக தெரியும். ஒரு காலத்தில் பாபர் பாகிஸ்தானின் நம்பிக்கையாக இருந்தார், ஆனால் இப்போது இல்லை, ஏனென்றால் (சிறப்பாக) செய்யக்கூடிய மற்ற வீரர்கள் உள்ளனர்” என்று விமர்சித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now