விராட் கோலியின் சாதனையை முறியடிப்பாரா பாபர் ஆசாம்?
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் எனும் சாதனையை படைக்க பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாமிற்கு 51 ரன்களை மட்டுமே தேவைப்படுகிறது.
பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. அதன்பின் நடைபெற இருந்த மூன்றாவது டி20 போட்டியும் மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது.
Trending
இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை (மே 30) லண்டனில் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இங்கிலாந்து அணி இத்தொடரில் நடைபெற்ற ஒரு போட்டியில் வெற்றிபெற்றுள்ள நிலையில், இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றும் முயற்சியில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் புதிய சாதனை படைக்க வாய்ப்புள்ளது.
அதன்படி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த வீரராக இந்திய அணியின் விராட் கோலி உள்ளார். அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4037 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவரைத்தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் 3987 ரன்களைச் சேர்த்து இரண்டாம் இடத்தில் உள்ளார். இந்நிலையில் இன்றைய போட்டியில் பாபர் அசாம் மேற்கொண்டு 51 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் விராட் கோலியின் சாதனையை முறியடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த போட்டியின் போது 32 ரன்களைச் சேர்த்திருந்த பாபர் ஆசாம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த இரண்டாவது வீரர் எனும் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்து இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள்
- விராட் கோலி - 4037 ரன்கள் (109 இன்னிங்ஸ்)
- பாபர் ஆசாம் - 3997 ரன்கள் (111 இன்னிங்ஸ்)
- ரோஹித் சர்மா - 3974 ரன்கள் (143 இன்னிங்ஸ்)
- பால் ஸ்டிர்லிங் - 3589 ரன்கள் (141 இன்னிங்ஸ்)
- மார்ட்டின் கப்தில் - 3531 ரன்கள் (118 இன்னிங்ஸ்)
Win Big, Make Your Cricket Tales Now