
பாகிஸ்தான் அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது நவம்பர் 04ஆம் தேதி தொடங்கிய நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நவம்பர் 14ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இதில் மெல்போர்னில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது. இதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (நவம்பர் 8) அடிலெய்டில் நடைபெறவுள்ளது.
ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி முதல் ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று அசத்திய நிலையில் இப்போட்டியிலும் வெற்றிபெற்றால் தொடரை கைப்பற்றும். அதேசமயம் பாகிஸ்தான் அணியும் இப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே தொடரை இழக்கும் நிலையில் இருந்து தப்பிக்கும் என்பதால், நிச்சயம் இப்போட்டியில் இரு அணிகளும் வெற்றிக்காக கடினமாக போராடும். இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.