
வங்கதேச அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராவல்பிண்டியில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியானது பாகிஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேச அணி தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்தும் சாதனை படைத்துள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை (ஆகஸ்ட் 30) ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் ஏற்கெனவே வங்கதேச அணி வெற்றிபெற்றுள்ள நிலையில், இப்போட்டியானடி டிராவில் முடிவடைந்தாலும் வங்கதேச அணியானது தொடரை வென்று சாதனை படைக்கும். அதேசமயம், பாகிஸ்தான் அணி இப்போட்டியில் நிச்சயம் வெற்றிபெற்றால் மட்டுமே தொடரை சமன்செய்ய முடியும்.
இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேற்கொண்டு இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார்.