
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தயாராகும் வகையில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடின. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் முன்னேறிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இந்த இறுதிப்போட்டி நேற்று கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது நியூசிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 242 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் முகமது ரிஸ்வான் 46 ரன்களையும், சல்மான் ஆகா 45 ரன்களையும் சேர்த்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து, 243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டேரில் மிட்செல், டாம் லேதம் அரைசதம் கடந்து அசத்தினர். அவர்களுடன் டெவான் கான்வே 48 ரன்களையும், கேன் வில்லியம்சன் 38 ரன்களையும் சேர்க்க, இறுதியில், நியூசிலாந்து 45.2 ஓவரில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தனை வீழ்த்தியதுடன் முத்தரப்பு தொடரையும் வென்று அசத்தியுள்ளது.