
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முன்னாள் சாம்பியன் அணியான பாகிஸ்தான் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி வீழ்த்தி சாதனை படைத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் நிர்ணயிக்கப்பட்ட 283 ரன்கள் இலக்கை, 49 ஓவர்களில் எட்டி ஆஃப்கானிஸ்தான் அணி அபார வெற்றியை பதிவு செய்தது.
இதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் ஆஃப்கானிஸ்தான் அணி தொடக்க வீரர் குர்பாஸ் தான். பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடிய குர்பாஸ், 53 பந்துகளில் 65 ரன்களை விளாசி தள்ளினார். ஒருநாள் கிரிக்கெட்டில் முதல்முறையாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதால், ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்த போட்டிக்கு பின் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தரப்பில் ஆஃப்கானிஸ்தான் அணியின் குர்பாஸிற்கு பேட் ஒன்று பரிசாக அளிக்கப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் அணி ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்திருந்தனர். தோல்வியின் போது இதுபோன்ற பரிசுகளை வழங்க வேண்டியது அவசியமா என்ற கேள்விகளை எழுப்பினர்.