
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் பாபர் ஆசாம் தலைமையிலான பெஷாவர் ஸால்மி அணியும், ஷான் மசூத் தலைமையிலான கராச்சி கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்வத பெஷாவர் ஸால்மி அணி 154 ரன்களைச் சேர்த்தது. இதில் கேப்டன் பாபர் ஆசம் 72 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கராச்சி கிங்ஸ் அணி பொல்லார்டின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 16.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் பெஷாவர் ஸால்மி அணியானது தோல்வியைத் தழுவினாலும், அந்த அணியின் கேப்டன் பாபர் ஆசாம் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அதன்படி இப்போட்டியில் பாபர் ஆசாம் 72 ரன்களைச் சேர்த்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 10ஆயிரம் ரன்களைச் சேர்த்த வீரர் எனும் சாதனையை படைத்து அசத்தியுள்ளார். முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் 285 இன்னிங்ஸில் 10ஆயிரம் ரன்களை கடந்ததே சாதனையாக இருந்த நிலையில், அதனை தற்போது பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசாம் 271 இன்னிங்ஸில் 10ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனை படைத்து அசத்தியுள்ளார்.