-mdl.jpg)
வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டி, மூன்று ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இரு அணிகள் இடையேயான இந்த தொடர் 12ஆம் தேதி துவங்க இருக்கும் நிலையில், இதில் முதலில் நடைபெறும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணியை பிசிசிஐ, கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.
இந்தநிலையில், ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ நேற்று அறிவித்தது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியில், விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பேட்ஸ்மேன்கள் வரிசையில் திலக் வர்மா அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். இது தவிர ஜெய்ஸ்வால், சுப்மன் கில், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியாவுடன், அக்ஷர் பட்டேல் இடம்பெற்றுள்ளார். பந்துவீச்சாளர்களாக ரவி பிஸ்னோய், சாஹல், குல்தீப் யாதவ், அர்ஸ்தீப் சிங், உம்ரன் மாலிக், ஆவேஸ் கான் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.