
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று தாக்காவிலுள்ள ஷேர் பங்களா தேசிய மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் - பிலீப் சால்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சால்ட் 7 ரன்களிலும், டேவிட் மாலன் 11 ரன்னிலும், ஜேம்ஸ் வின்ஸ் 5 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ஜேசன் ராய் தனது அரைசதத்தை கடந்தார்.
பின்னர் அவருடன் இணைந்த் கேப்டன் ஜோஸ் பட்லரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த ஜேசன் ராய் சதம் விளாச, ஜோஸ் பட்லரும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் 132 ரன்களைச் சேர்த்திருந்த ஜேசன் ராய் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த வில் ஜேக்ஸ் ஒரு ரன்னுடன் பெவிலியன் திரும்பினார்.