இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனைப்படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்திய அணிக்காக விளையாடிய முதல் 34 போட்டிகளில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை ஸ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வருகிறார் ஸ்ரேயாஸ் ஐயர். டி20 கிரிக்கெட் போட்டிகளில் தடுமாறி வந்தாலும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4வது வீரராக களமிறங்கி வரும் ஸ்ரேயாஸ் ஐயர், நடப்பாண்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அண்மை காலமாக டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கவனத்தை கொடுத்து வந்த இந்திய அணி, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இளம் வீரர்களை கொண்டு தவான் தலைமையில் இந்திய அணி கட்டமைக்கப்பட்டு விளையாடி வந்தது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் சிறிது சிறிதாக முக்கிய வீரராக உருவெடுத்தார்.
Trending
இவரது ஃபார்மை கணக்கில் கொண்டு சீனியர் வீரர்கள் இருக்கும் அணியிலும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதிலும் ஸ்ரேயாஸ் சிறப்பாக விளையாட, தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று வங்கதேச அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஒருபக்கம் ஸ்ரேயாஸ் தனியாக நின்று 82 ரன்கள் விளாசினார்.
இதன் மூலம் நடப்பாண்டில் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்ரேயாஸ், 720 ரன்கள் விளாசி அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதேபோல் இந்திய அணிக்காக அறிமுகமாகி விளையாடிய முதல் 34 போட்டிகளில் 1,534 ரன்கள் விளாசி சாதனை படைத்துள்ளார்.
இதுவரை இந்திய அணிக்காக அறிமுகமாகி விளையாடிய 34 போட்டிகளில் எந்த வீரரும் 1,500 ரன்களை கடந்ததில்லை. இந்த சாதனை மூலம் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய ஒருநாள் அணியின் தவிர்க்க முடியாத வீரராக வளர்ந்துள்ளார். இதுவரை விளையாடியுள்ள 34 போட்டிகளில் 2 சதம், 14 அரைசதங்களை அவர் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now