
இந்தியா - வங்கதேசம் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று வங்கதேசம் 2-0 என ஒருநாள் தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆடாததால் கேஎல் ராகுல் கேப்டனாக செயல்படுகிறார். ரோஹித்துக்கு பதிலாக ஷிகர் தவானுடன் இஷான் கிஷன் தொடக்க வீரராக இறங்கினார். இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் சீனியர் தொடக்க வீரர் ஷிகர் தவான் 3 ரன்னுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கிய இளம் வீரர் இஷான் கிஷன் அதிரடியாக பேட்டிங் ஆடி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதத்தை விளாசினார். தனது முதல் சதத்தையே இரட்டை சதமாக மாற்றி வரலாற்று சாதனை படைத்தார். அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 131 பந்தில் 24 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 210 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
இஷான் கிஷன் - கோலி இணைந்து 2வது விக்கெட்டுக்கு 290 ரன்களை குவித்தனர். இஷான் கிஷன் 210 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவருடன் இணைந்து அபாரமாக விளையாடிய விராட் கோலி, சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் சதமடித்தார். 86 பந்தில் சதமடித்த விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 44வது சதத்தை விளாசினார். கடைசியாக 2019 மார்ச் மாதம் சதமடித்த விராட் கோலி, அதன்பின்னர் ஒருநாள் போட்டியில் இப்போதுதான் சதமடித்தார்.