
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி இன்று சட்டோகிராமில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்த இந்தியா வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ஷிகர் தவான் வெறும் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சிக் கொடுத்தார். இதனால் இந்திய அணியும் 15 - 1 விக்கெட் என இக்கட்டான சூழலில் இருந்தது. அதன் பின்னர் வந்த முன்னணி வீரர் விராட் கோலியும் தொடக்கத்தில் இருந்தே பதற்றத்துடன் காணப்பட்டார். எந்த பந்தில் அவுட்டாகப்போகிறார் என்பது போல ரசிகர்களும் பதறினர்.
அதற்கேற்றார் போலவே ஒரு பந்து அமைந்தது. ஆட்டத்தின் 6ஆவது ஓவரில் மெஹிடி ஹாசன் வீசிய 3ஆவது பந்தை கோலி மிட் ஃப்ளிக் ஷாட் ஆட முயன்றார். ஆனால் துரதிஷ்டவசமாக பந்து நேராக ஷார்ட் மிட் விக்கெட்டில் இருந்த கேப்டன் லிட்டன் தாஸிடம் சென்றது. அழகாக சென்ற அந்த கேட்ச்-ஐ அவர் பிடிக்க தவறவிட்டார்.