
ஐசிசி 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2ஆவது போட்டி செப்டம்பர் 22ஆம் தேதி வங்கதேச தலைநகர் தாக்காவில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஃபின் ஆலன் - வில் யங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வில் யங் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, ஃபின் ஆலன் 12 ரன்களுக்கும், சாத் பௌஸ் 14 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஹென்றி நிக்கோலஸ் - டாம் பிளெண்டல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹென்றி நிக்கோலஸ் 49 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரச்சின் ரவீந்திராவும் 10 ரன்களோடு விக்கெட்டை இழந்தார். அதன்பின் அரைசதம் கடந்திருந்த டாம் பிளெண்டலும் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 68 ரன்கள் என ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.