
BAN vs PAK, 3rd T20I: வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் வாய்ப்பு பெற்ற சாஹிப்சாதா ஃபர்ஹான் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார்.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள முதலிரண்டு போட்டியின் முடிவில் வங்கதேச அணி இரண்டு போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை வென்றுள்ளது. இதையடுத்து வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று தாக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சைம் அயூப் - சாஹிப்சாதா ஃபர்ஹான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடிய ஃபர்ஹான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 82 ரன்களை எட்டிய நிலையில், சைம் அயூப் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து 6 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 63 ரன்களை எடுத்திருந்த ஃபர்ஹானும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய முகமது ஹாரிஸ் 5 ரன்னிலும், அதிரடியாக விளையாடிய ஹசன் நவாஸ் 33 ரன்னிலும், ஹுசைன் தாலத் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.