
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று சட்டோகிராமில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - அவிஷ்கா ஃபெர்னாண்டோ இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.
அதன்பின் 33 ரன்கள் எடுத்த நிலையில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 36 ரன்கள் எடுத்திருந்த பதும் நிஷங்காவும் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் குசால் மெண்டிஸ் ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கிய சமரவிக்ரமா, சரித் ஆசலங்கா ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் குசால் மெண்டிஸுடன் இணைந்த ஜனித் லியானகே பொறுப்பாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். பின் குசால் மெண்டிஸ் 59 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அதன்பின் களமிறங்கிய் வநிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.