BAN vs SL, 1st Test: இமாலய இலக்கை நிர்ணயித்த இலங்கை; மீண்டும் தடுமாறும் வங்கதேசம்!
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இமாலய இலக்கை துரத்திவரும் வங்கதேச அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று சில்ஹெட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கமே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் கேப்டன் தனஞ்செயா டி சில்வா - கமிந்து மெண்டிஸ் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலம் அந்த அணி சரிவிலிருந்து மீண்டது. இதன்மூலம் 68 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 280 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் கலித் அஹ்மத், அறிமுக வீரர் நஹித் ரானா ஆகியோர் தலா 3 மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Trending
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியில் தைஜுல் இஸ்லாம் 47 ரன்கள் எடுத்ததை தவிற மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் விஸ்வா ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், ரஹிதா, லஹிரு குமாரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்களைச் சேர்த்தனர். இதையடுத்து இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்தை தனஞ்செயா டி சில்வா 23 ரன்களுடனும், விஸ்வா ஃபெர்னாண்டோ 2 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் ஃபெர்னாண்டோ 4 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த டி சில்வா - கமிந்து மெண்டிஸ் இணை மீண்டும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் இந்த இன்னிங்ஸிலும் சதமடித்து மிரட்டினர். முன்னதாக இப்போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் இந்த இருவரும் சதமடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது. அதன்பின் 9 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 108 ரன்களுக்கும், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கமிந்து மெண்டிஸ் 16 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் என 164 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 418 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் மெஹிதி ஹசன் மிரஸ் 4 விக்கெட்டுகளையும், நஹித் ரானா, தைஜுல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இலங்கை அணி வங்கதேச அணிக்கு 511 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் மீண்டும் சொதப்பினர். அதன்படி அந்த அணி மஹ்முத் ஹசன் ரன்கள் ஏதுமின்றியும், ஸகிர் ஹசன் 19 ரன்களிலும், கேப்டன் நஹ்முல் ஹொசைன் சாண்டோ 6 ரன்களுக்கும், ஷஹதத் ஹொசைன், லிட்டன் தாஸ் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அதன்பின் இனைந்த தைஜுல் இஸ்லாம் - மொமினுல் ஹக் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். இதன்மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 5 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் மொமினுல் ஹக் 7 ரன்களுடனும், தைஜுல் இஸ்லாம் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதையடுத்து 464 ரன்கள் பின் தங்கிய நிலையில் வங்கதேச அணி நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now