
இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை மட்டுமே சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 37 ரன்களையும், குசால் மெண்டிஸ் 36 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் தஸ்கின், மெஹிதி, முஸ்தஃபிசூர், சௌமியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியில் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ அரைசதம் கடந்ததுடன், ஆட்டமிழக்காமல் 53 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்ற்யைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் வங்கதேச அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் வங்கதேச அணி 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்தது.