
இலங்கை அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று சட்டோகிராமில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 531 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 93 ரன்களையும், கமிந்து மெண்டிஸ் 92 ரன்களையும், திமுத் கருணரத்னே 86 ரன்களையும் சேர்த்து அசத்தினர். வங்கதேச அணி தரப்பில் ஷாகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளையும், ஹசன் மஹ்முத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த வங்கதேச அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 55 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஸகிர் ஹசன் 28 ரன்களுடனும், தைஜுல் இஸ்லாம் ரன்கள் ஏதுமின்றியும் தொடர்ந்தனர். இதில் தைஜுல் இஸ்லாம் 22 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார்.