-mdl.jpg)
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த முதல் மூன்று போட்டிகளிலும் வங்கதேச அணி வெற்றிபெற்றதுடன் 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று தாக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு தன்ஸித் ஹசன் - சௌமீயா சர்க்கார் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தன்ஸித் ஹசன் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் இருவரது பார்ட்னஷிப்பும் 100 ரன்களைத் தாண்டியது. அதன்பின் அரைசதம் கடந்திருந்த தன்ஸித் ஹசன் 52 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து மறுபக்கம் அரைசதத்தை நெருங்கிய சௌமியா சர்காரும் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் தாவ்ஹித் ஹிரிடோயை தவிர்த்த மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் வங்கதேச அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜிம்பாப்வே தரப்பில் லுக் ஜோங்வா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.