
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் பங்கேற்றுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், சூப்பர் 8 சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இத்தொடரை தொடர்ந்து இந்திய அணியானது ஜிம்பாப்வே மற்றும் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது.
இந்நிலையில் 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளுக்கான இந்திய அணி தங்களுடையை சொந்த மண்ணில் விளையாடும் தொடர்களின் அறிவிப்பினை பிசிசிஐ இன்றைய தினம் அறிவித்துள்ளது. அந்தவகையில் வங்கதே அணியானது வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது.
அதனைத்தொடர்ந்து வருகின்ற அக்டோபர் மாதம் நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்பின் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது.