
இலங்கை அணி தற்போது ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இதனைத்தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இலங்கை அணி விளையாடவுள்ளது. அதன்பின் அடுத்த மாதம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் மார்ச் 01ஆம் தேதியும், ஒருநாள் தொடர் மார்ச் 13ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வங்கதேச அணியில் புதிய கேப்டனாக நஜ்முல் ஹொசைன் நியமிக்கப்பட்டுள்ளார். வங்கதேச அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஷாகிப் அல் ஹசன் காயம் காரணமாக விளையாடாமல் இருந்து வருவதால், அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் நியமன் செய்யப்பட்டுள்ளார்.
அதேசமயம் அணியின் மூத்த தொடக்க வீரரான தமிம் இக்பாலுக்கு இந்த அணியில் வாய்ப்பு மறுபக்கப்பட்டதுடன், வங்கதேச கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்திலிருந்து அவர் விலக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கூறுப்படுகிறது. அதேபோல் ஷொரிஃபுல் ஹசன், தன்ஸிம் ஹசன் ஷாகிப், சௌமியா சர்க்கார், முஸ்தபிசூர் ரஹ்மான், டஸ்கின் அஹ்மத் ஆகியோர் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம்பிடித்துள்ளனர்.