
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 20ஆம் தேதி ராவல்பிண்டியிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 30ஆம் தேதி கராச்சியிலும் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் வங்கதேச அணியின் மூத்த வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல் ஒன்றை எட்டும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார். அந்தவகையில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் 32 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில், சர்வதேச கிரிக்கெட்டில் 15,000 ரன்களை எட்டவுள்ளார். மேற்கொண்டு இந்த மைல்கல்லை எட்டும் இரண்டாவது வங்கதேச வீரர் எனும் சாதனையையும் அவர் படைப்பார்.
இதற்கு முன் அந்த அணியின் முன்னாள் வீரர் தமிம் இக்பால் வங்கதேச அணிக்காக 387 போட்டிகளில் விளையாடி 15,192 ரன்களைக் குவித்துள்ளார். அதில் 25 சதங்கள் மற்றும் 94 அரைசதங்களும் அடங்கும். அதேசமயம் முஷ்ஃபிக்கூர் ரஹிம் வங்கதேச அணிக்காக இதுநாள் வரை 461 போட்டிகளில், 509 இன்னிங்ஸ்களில் விளையாடி 14,968 ரன்களை எடுத்துள்ளார். இதில் அவர் 19 சதங்கள் மற்றும் 82 அரைசதங்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.