
வங்கதேசம் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகளை உள்ளடக்கிய கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது. இதனையடுத்து இப்போட்டிக்கான இந்திய அணி சமீபத்தில் சென்னை வந்தடைந்தது.
அதன்பின் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா என நட்சத்திர வீரர்கள் தீவிர் பயிறியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான நஜ்முல் ஹூசைன் ஷன்டோ தலைமையிலான வங்கதேசம் அணியினர் நேற்று சென்னை வந்து சேர்ந்தனர். இதனைத்தொடர்ந்து இன்று முதல் அவர்களும் பயிற்சியை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள வங்கதேச அணியின் அனுபவ வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் வரலாற்று சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதன்படி, இந்தப் போட்டியில் முஷ்ஃபிக்கூர் ரஹிம் 9 ரன்கள் எடுத்தால், சர்வதேச கிரிக்கெட்டில் வங்கதேச அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை வசப்படுத்துவார். இதில் தற்சமயம் அந்த அணியின் முன்னாள் கேப்டன் தமிம் இக்பால் முதலிடத்தில் உள்ளார்.