
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் இன்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொழும்புவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் லிட்டன் தாஸ் ரன்கள் ஏதுமின்றியும், தன்ஸித் ஹசன் 13 ரன்களிலும், அனாமுல் ஹக் 4 ரன்களுக்கும், மெஹிதி ஹசன் மிராஸ் 14 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
இதனால் வங்கதேச அணி 59 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஷாகிப் அல் ஹசன் - தாஹித் ஹிரிடோய் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். ஒரு கட்டத்திற்கு மேல் பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசிய இந்த இணை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
இதில் அரைசதம் கடந்திருந்த ஷாகிப் அல் ஹசன் 6 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 80 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 52 ரன்களைச் சேர்த்திருந்த தாஹித் ஹிரிடோயும் விக்கெட்டை இழந்தார். இறுதியில் நசும் அஹ்மது - மெஹிதி ஹசன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.