BAN vs IND, 1st Test: சதத்தை தவறவிட்ட ஸ்ரேயாஸ்; வங்கதேசத்தை வாட்டியெடுக்கும் அஸ்வின் & குல்தீப்!
வங்கதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட்டின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்களை எடுத்துள்ளது.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 2 போட்டிகளில் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது இந்தியா. அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
Trending
அதன்படி, இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் – ஷுப்மான் கில் ஜோடி களமிறங்கினர். இதில் 40 பந்துகளில் 3 பவுண்டரிகளை விரட்டிய ஷுப்மன் கில் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு, களத்தில் இருந்த கேஎல் ராகுலுடன் ஜோடி சேர்ந்தார் புஜாரா. அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்துக் கொண்டிருந்த இந்த ஜோடியில் 3 பவுண்டரியை விரட்டிய ராகுல் 22 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து புஜாராவுடன் ஜோடி சேர்ந்தார் கோலி. அவர் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் தைஜுல் இஸ்லாமிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் களம்புகுந்த பண்ட் புஜாராவுடன் சேர்ந்து நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தி வந்தார். 2 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் என மிரட்டல் அடி அடித்த அவர் அரைசதம் விளாசுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 45 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
அவரைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் புஜாராவுடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தார். இந்த ஜோடி அணிக்கு தேவையான ரன்களை அசத்தலாக குவித்து வந்தனர். மேலும், இருவருமே அரைசதம் விளாசி அசத்தினர். தொடர்ந்து மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்த ஜோடியில் சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 203 பந்துகளில் 11 பவுண்டரிகளை விரட்டி 90 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அவரைத்தொடர்ந்து வந்த அக்சர் படேல் 14, முதல் நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு வர இருந்த 90 வது ஓவரின் கடைசி பந்தில் எல்பிடபிள்யூ ஆகி அவுட் ஆனார்.
இதனால் முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 278 ரன்கள் சேர்த்தது. அதன்பின் 82 ரன்களுடன் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் கூடுதலாக நான்கு ரன்களை மட்டுமே சேர்த்து 86 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் - குல்தீப் யாதவ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் சிறுக சிறுக உயர்த்தினர்.
தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரையும் பிரிக்க முடியாமல் வங்கதேச பந்துவீச்சளர்கள் திணறி வருகின்றனர். இதனால் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 40 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேச தரப்பில் தைஜுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now