
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் அயர்லாந்து மகளிர் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வந்தது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வங்கதேச அணி வெற்றிபெற்றிருந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று தாக்காவில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணிக்கு சாரா ஃபோர்ஃப்ஸ் மற்றும் கேபி லூயிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபோர்ப்ஸ் 5 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டான் ஏமி ஹண்டர் 23 ரன்களிலும், ஓர்லா பிரென்டர்கஸ்ட் 27 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் அணியின் மற்றொரு தொடக்க வீராங்கனை கேபி லூயிஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், 52 ரன்களுடன் அவரும் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளில் அர்லின் கெல்லி 18 ரன்களையும், அலனா தால்ஸல் 19 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் அயர்லாந்து மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்களில் ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் ஃபஹிமா கதும் 3 விக்கெட்டுகளையும், சுல்தானா கதும், நஹிதா அக்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.