
வங்கதேச அணி சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகளை உள்ளடக்கிய டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகளை உள்ளடக்கிய டி20 தொடரில் விளையாடியது. இதில் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும் டி20 தொடரை 3-0 என்ற கணக்கிலும் முழுமையாக இழந்ததுடன், ஒயிட்வாஷும் ஆனது. இதனையடுத்து அந்த அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
அதன்படி வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 21ஆம் தேதியும் தாக்காவிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 29ஆம் தேதி சட்டோகிராமிலும் நடைபெறவுள்ளது. இதனையடுத்து இத்தொடருக்காக வங்கதேச அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த சந்திக ஹத்துருசிங்கவை வங்கதேச கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்துள்ளது.
மேலும் "உங்களால் ஒரு தேசிய வீரரை உடல்ரீதியாக தாக்க முடியாது," என்று வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் ஃபரூக் அஹ்மத் தெரிவித்ததுடன், ஹதுருசிங்கவின் இடைநீக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இருப்பினும் ஹத்ருசிங்க எந்த வீரரை தாக்கினார் உள்ளிட்ட எந்தவொரு கூடுதல் விவரங்களையும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் இருந்து வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது,