
வங்கதேச அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 03ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 20 முதல் 25ஆம் தேதிவரை ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 03ஆம் தேதி வரையில் கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான பாகிஸ்தான் அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஷான் மசூத் தலைமையிலான இந்த அணியில் சௌத் சகீல் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து இத்தொடருக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. நஜ்முல் ஹொசைன் தலைமையிலான இந்த அணியில் அனுபவ வீரர் ஷாகிப் அல் ஹசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் நட்சத்திர வீரர்களான தஸ்கின் அஹ்மத், முஷ்பிக்கூர் ரஹிம், லிட்டன் தாஸ், மெஹதி ஹசன், ஷொரிஃபுல் இஸ்லாம், மொமினுல் ஹக் உள்ளிட்டோருக்கும் இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.